தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும்..!! இன்று 9 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு..!! வானிலை மையம் அலெர்ட்..!!
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (நவ.14) காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோர பகுதிகளில் இன்று நிலவக்கூடும்.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.