தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிக்கையில், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேனி, தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், மே 22ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட கடல் பகுதிக்கு மே 22ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.