Holiday...! கொட்டும் கனமழை... இன்று வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை...!
கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நேற்று நிலவியது. இதற்கிடையே, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஜூலை 19-ம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடியலேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீவேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்தது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.