கனமழை எதிரொலி!… 8 மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப்படை!
கனமழை தொடரும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை உட்பா பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலை தெற்கு அந்தமான பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிசம்பர் 2-ம் தேதி, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் 4 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தேங்கி உள்ள நீரை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று தேசிய பேரிடர் மீட்பு படையினர் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்டங்களுக்கு விரைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், 4967 நிவாரண முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன. மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணிநேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.