Alert...! 18 மாவட்டத்தில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை...!
தமிழகத்தில் இன்று 18 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, நாளை கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை சில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அக்டோபர் 2, 3-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.