#Orange Alert: நெல்லையில் கனமழை.. அருவி, கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை உத்தரவு...!
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் அகஸ்தியர் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால், வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்தையனார் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி மாஞ்சோலை பகுதியில் உள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.