கனமழை..!! இனி இரவே விடுமுறையை அறிவிக்க வேண்டும்..!! பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு..!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
மழை காரணமாக இன்று (நவம்பர் 20) திருவாரூர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், புதுச்சேரியில் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் மழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் "மகிழ் முற்றம்" திட்டத்திற்கான இலச்சினையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இதையடுத்து, அவரிடம் தொடர் மழை பெய்து வரும்போது காலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகிறது. இதனால், மாணவர்கள் பாதி தூரம் சென்ற பின்பு திரும்பும் நிலை ஏற்படுவதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், மழை அளவை பொறுத்து, இனி முதல் நாள் இரவே விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பதிலளித்தார்.