இன்று முதல் 3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
நீலகிரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் நல்ல வெயிலும், இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 29) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 30, ஜூலை 1 ஆகிய தேதிகளில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2 - 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை/இரவு வேளையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.