வெயில் தாக்கம்!. ஹஜ் பயணம் மேற்கொண்ட தமிழர்கள் 10 பேர் மரணம்!.
Hajj: தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் 10 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் சென்றவர்களில் முதல் விமானம் நேற்று 326 பேருடன் சென்னை திரும்பியது. அவர்களுக்கு விமான நிலையத்தில் அமைச்சர், கமிட்டி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணம். துல்ஹஜ் மாதத்தில் இந்த கடமையை நிறைவேற்ற முஸ்லிம்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வார்கள்.
புனித ஹஜ் பயணத்திற்காக முதல் ஹஜ் விமானம் கடந்த மே 25ம் தேதி புறப்பட்டு சென்றது. புனித ஹஜ் பயணத்தை முடித்துக்கொண்டு சவூதி அரேபியா மதீனா நகரில் இருந்து 170 பெண்கள் உள்பட 326 பேருடன் புறப்பட்ட தனி விமானம் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. புனித பயணம் முடித்து விட்டு வந்தவர்களை, தமிழ்நாடு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி நிர்வாகிகள் வரவேற்றனர்.
பின்னர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களிடம் கூறியதாவது: புனித ஹஜ் பயணத்திற்காக தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 5,801 பேர் சென்றனர். இப்போது முதல் விமானத்தில் வந்துள்ள 326 பேரை முதல்வர் சார்பில் வரவேற்று உள்ளோம். புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். புனித ஹஜ் பயணத்தின் போது வெயிலின் தாக்கத்தால், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
மெக்காவிலிருந்து மதினாவிற்கு செல்லும் வழியில் நடந்த பேருந்து விபத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் இழப்பை தவிர்க்கும் வகையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் வரும் காலங்களில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.