தீராத வயிற்றுப்புண் குணமாகனுமா.? இதே போல் தேங்காய் பால் கஞ்சி செஞ்சி சாப்பிட்டு பாருங்க.!
தேங்காய் பால் கஞ்சி வயிற்று புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். இந்தக் கஞ்சி வயிற்றுப் புண்ணை ஆற்றுவதோடு உடலுக்கு குளிர்ச்சியையும் பலத்தையும் கொடுக்கிறது. இந்த கஞ்சி எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
தேங்காய் பால் கஞ்சி செய்வதற்கு 1 கப் பச்சரிசி, 2 கப் தண்ணீர், 1 தேங்காய், 5 பல் பூண்டு மற்றும் 1 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அரிசியை நன்றாக கழுவி எடுக்கவும். தேங்காயை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். முதலில் எடுக்கும் பாலையும் இரண்டாவது எடுக்கும் பாலையும் தனித்தனியாக பிரித்து வைக்கவும்.
இப்போது குக்கரில் அரிசி வெந்தயம் பூண்டு மற்றும் இரண்டாவதாக எடுக்கப்பட்ட தேங்காய் பால் 1 கப் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். அதன் பிறகு குக்கரை திறந்து அரிசியை நன்றாக மசிந்து விடவும். அரிசி நன்றாக மசிந்த பின்பு இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து முதலாவதாக எடுத்த தேங்காய் பால்1 கப் சேர்த்து நன்றாக கிளறி விடவும். கிளறி விட்ட பின்பு கொதி வருவதற்கு முன் அடுப்பை அணைத்து விடவும். சுவையான தேங்காய் பால் கஞ்சி ரெடி. இதனை காலை உணவாக சாப்பிடலாம்.