காய்ச்சலில் ஏற்படும் வாய் கசப்புக்கு சாப்பிடும் ஆல்பக்கோடா பழம்.! உடல் எடையை குறைக்க உதவுமா.?
பழ வகைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒன்றாகும். அவற்றில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பழங்கள் பொதுவாக சாப்பிட்டு வந்தாலும் சில பழங்கள் மருந்தாக மட்டுமே பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் ஆல்பக்கோடா பழம். பிளம்ஸ் வகையைச் சார்ந்த இந்த பழம் காய்ச்சல் நேரத்தில் ஏற்படும் வாய் கசப்பை போக்குவதற்கும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்கும் சாப்பிடக்கூடியதாகும். எனினும் இந்த பழங்கள் மற்ற நேரங்களிலும் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை உள்ளடக்கி இருக்கிறது என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பழங்களில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்களும் நிறைந்திருக்கிறது.
காய்ச்சலால் பாதிக்கப்படும் போது இந்த பழங்களை மென்று சாப்பிட்டு வந்தால் காய்ச்சலினால் ஏற்படும் வாய் கசப்பு நீங்கி நாவின் சுவை உணர்வு அதிகரிக்கும். மேலும் இந்தப் பழம் உடலின் உஷ்ணத்தை குறைப்பதோடு காய்ச்சலால் ஏற்படும் அசதியையும் போக்குகிறது. இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளையும் வெளியேற்றுகிறது. இரும்புச்சத்தை அதிகமாக கொண்டிருக்கும் இந்த பழம் நம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு ஹீமோகுளோபின் பற்றாக்குறையால் ஏற்படும் ரத்த சோகையையும் தடுக்கிறது.
இந்தப் பழங்களில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் நம் எலும்புகளின் உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாக இருக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு பொட்டாசியம் சத்து அவசியமான ஒன்றாகும். இந்த ஆல்பக்கோடா பழங்களில் பொட்டாசியம் சத்து நிறைந்திருக்கிறது. இவை நம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமலும் கட்டுப்பாடாக வைத்திருக்கிறது. இந்தப் பழங்களில் இருக்கும் வைட்டமின் சி நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்குகிறது.