கார் டிரைவர் பலியான வழக்கில் ஜாமீனில் விடுதலையான தலைமை காவலர் சஸ்பெண்ட்
சென்னை மதுரவாயல் அருகே போலீசார் தாக்கியதால் கார் ஓட்டுநர் பலியான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தலைமை காவலர் ரிஸ்வான் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). கால்டாக்சி டிரைவரான இவர் கடந்த மார்ச் 21ஆம் தேதி இரவு நேரத்தில் மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையோரத்தில் காரை நிறுத்தி விட்டு, ஒரு பெண்ணுடன் பேசி கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அங்கு ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வான், ஓட்டநர் ராஜ்குமாரிடம் விசாரித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ராஜ்குமாரை தலைமை காவலர் ரிஸ்வான் தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் ராஜ்குமார் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே ராஜ்குமாருடன் நின்றிருந்த பெண், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரவாயல் போலீசார் அங்கு விரைந்து சென்று ராஜ்குமாரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில், ராஜ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, மாரடைப்பு காரணமாக இறந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. எனினும், போலீசார் தாக்கியதில் ராஜ்குமார் மர்மமான முறையில் இறந்துபோனதாக உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ரோந்து பணியில் இருந்த 3 காவலர்களையும் காவல்துறை உயர் அதிகாரிகள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். ரிஸ்வான் தாக்கியதாலேயே ராஜ்குமார் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து ரிஸ்வான் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கார் ஓட்டுநர் பலியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மதுரவாயல் காவல் நிலைய தலைமை காவலர் ரிஸ்வானுக்கு பூவிருந்தவல்லி நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்நிலையில் தலைமை காவலர் ரிஸ்வானை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.