செங்கல்லை காட்டி வித்தை காட்டுறாரு..! கதைய மாத்துப்பா உதயநிதி…! கலாய்த்த எடப்பாடி..!
உதயநிதி ஸ்டாலின் 3 ஆண்டுகளாக செங்கல்லை ரோட்டில் காட்டிக் கொண்டு மக்களிடம் வித்தை காட்டுகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலாய்த்துள்ளார்.
திருச்சியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். இந்த வேட்பாளர்கள் அறிமுக விழாவில் பிரேமலதா விஜயகாந்த், கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டில் 3 அணி போட்டி என்கின்றனர். மக்களுக்கு தெரியும் தேர்தலில் போட்டி என வந்ததுவிட்டால் அது அதிமுக மற்றும் திமுகவிற்கு இடையேதான்.
திமுகவின் 3ஆண்டு ஆட்சி காலத்தில் ஒரு மருத்துவ கல்லூரியை கூட கொண்டு வர முடிந்ததா..? எப்போ பார்த்தாலும் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கல்லை மட்டும் எடுத்துக்கொண்டு, மூன்று வருடமாக அதையே காட்டி கொண்டிருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்று எங்களின் புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசாங்கம் எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் கொண்டு வந்தது. நாங்களும் அந்த எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து கட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் நீங்கள் (திமுக) என்ன செய்தீர்கள். இந்த செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டும். ரோட்டில் காட்டி பிரயோஜனம் இல்லை, அதனால் என்ன பயன். விளம்பரத்திற்காக செங்கல்லை தூக்கி காட்டுறாரு. கதையை மாத்துப்பா. இதையே காட்டிட்டு இருக்க வேண்டாம். 2019ல் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணியில் இருந்தார்கள். இந்த செங்கல்லை கொண்டுபோய் நாடாளுமன்றத்தில் காட்ட வேண்டியது தானே. 38 பேரும் நாடாளுமனறத்தில் செங்கல்லை காட்டி நீதியை பெற்று அந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை கட்டி இருக்கலாம். தில்லு, திராணி, தெம்பு இல்லை. கேட்க வேண்டிய இடம் நாடாளுமன்றம், அதற்காக தான தமிழ்நாட்டு மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள், அங்கே பெஞ்சை தேய்த்து விட்டு, வாய் மூடி மௌனம் சாதித்து விட்டு, இங்க வந்து செங்கல்லை தூக்கிட்டு இருக்காங்க.
உண்மையிலயே எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றால் 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து நாடாளுமன்றத்திலே அழுத்தம் கொடுத்திருக்கலாம். அதற்கு துணிவில்லை. இங்க வந்து செங்கல்லை புடிச்சிட்டு மக்கள் கிட்ட வித்தை காட்டிட்டு இருக்கிறார். தமிழ் நாட்டு மக்கள் அறிவாளிகள், விவரமானவர்கள், நீங்கள் சொல்வதை இனி நம்பமாட்டார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் தமிழ்நாட்டிற்கு தேவையான உரிமைகளை பெற, நிதியை பெற நாங்கள் பாடுபடுவோம். ஆனால், திமுக அப்படியல்ல. குடும்பத்திற்காக பாடுபடும். திமுக ஆட்சியில் போதைப்பொருள் மாநிலமாக தமிழ்நாடு மாறி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.
திமுக அமைச்சர்களின் ஊழல்களை சேகரித்து வைத்துள்ளேன். 2026-ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன், உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். சிறுபான்மையின மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதிமுக அவர்களுக்கு துணை நிற்கும். இதை நான் ஓட்டுக்காக சொல்லவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.