தினமும் வெள்ளை சாதம் சாப்பிட்டு உங்கள் ஆயுசு நாளை குறைக்காதீங்க!! வாரம் ஒரு முறை இப்படி செய்து சாப்பிடுங்க..
பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் வாரம் முழுவதும் வெள்ளை சாதம் தான் இருக்கும். ஆனால், அரிசியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சில வகையான நோய்கள் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆம், வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால், டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். வெள்ளை அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் உடல் எடை அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல், அரிசியை தினமும் சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதனால் நீங்கள் வெள்ளை சாதம் சாப்பிடுவதை குறைத்து சிறுதானிய வகைகளை சாப்பிடுவது சிறந்தது. சிறுதானிய உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால், உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைத்து நோய் இல்லாமல் வாழ முடியும்.
ஒரு சிலருக்கு சிறு தானியங்களை வைத்து என்ன, எப்படி சமைப்பது என்று தெரியாது. ஆனால் இந்த பதிவில், ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறுதானிய உணவை எப்படி சமைப்பது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.. அந்த வகையில் இன்று வரகு அரிசி வைத்து எப்படி சுவையான சிக்கன் சாதம் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
இதற்கு முதலில், 4 அல்லது 5 பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி, வெள்ளைப் பூண்டு பத்து ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அரைக்கிலோ சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் அரைத்த விழுதுகள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி தனியா தூள், இரண்டு தேக்கரண்டி கரம் மசாலா தூள், தேவையான அளவு உப்பு கலந்து 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு கப் வரகு அரிசியை சுத்தம் செய்து, அரை மணி நேரம் ஊற வையுங்கள்.
இப்பொழுது வழக்கம் போல், ஒரு குக்கரில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, , ஏலக்காய், கல்பாசி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். இப்போது பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம் சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளியை சேர்த்து வதக்கி விடுங்கள். தக்காளி நன்கு மசிந்து வெந்ததும், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடுங்கள். இப்போது, ஊற வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இப்போது இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி, நான்கு விசில்கள் வரும் வரை வேக வைத்துக் கொள்ளலாம்.
நான்கு விசில் வந்த உடன் அடுப்பை ஆப் செய்து விட்டால் சுவையான வரகு அரிசி சிக்கன் பிரியாணி தயார். இதில் நீங்கள் சிக்கனுக்கு பதில், காய்கறிகள், பருப்பு, போன்றவற்றை சேர்த்து பல வகையான சாதம் செய்து சாப்பிடலாம். இல்லையென்றால், வெறும் சாதமாக செய்து குழம்பு வைத்து சாப்பிடலாம். வரகு அரிசி மட்டும் இல்லாமல், திணை, குதிரைவாலி போன்று ஒவ்வொரு நாள் ஒவ்வொரு அரிசி செய்து சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு எந்த நோயும் வராது. நீண்ட ஆயுளுடன் வாழலாம்.