உங்கள் குழந்தைகளுக்கு புதிய ஆதார் கார்டு பெறுவது எப்படி..? எங்கு விண்ணப்பிக்க வேண்டும்..? பெற்றோர்களே தெரிஞ்சிக்கோங்க..!!
பள்ளியில் சேர்க்கை பெறுவது முதல் குழந்தைகளுக்கான அரசு திட்டத்தின் பலன்களைப் பெறுவது முதல் பாஸ்போர்ட் பெறுவது வரை ஆதார் முக்கியம். ஆதார் அட்டை பெற வயது வரம்பு ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழலாம். ஆனால், ஆதார் அட்டை பெற குறைந்தபட்ச வயது வரம்பு இல்லை. அதாவது பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை பெற விண்ணப்பிக்கலாம். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை செய்ய கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை.
முன்னதாக, புதிதாகப் பிறந்த குழந்தைகள் அல்லது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வசதி இல்லை. 2018ஆம் ஆண்டில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை அறிமுகப்படுத்தியது. பால்ய ஆதார் அட்டை (Bhal Adhaar Card) என்றும் அழைக்கப்படும் நீல நிற ஆதார் அட்டை, குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. பால்ய ஆதார் அட்டையின் செல்லுபடியாகும் காலம் ஐந்து ஆண்டுகளாகும்.
இருப்பினும், பெற்றோர்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அதனை நீட்டிக்க முடியும். இதைச் செய்வதன் மூலம், குழந்தைக்கு ஐந்து வயது ஆன பிறகும் பால்ய ஆதார் அட்டையை சரியான அடையாளச் சான்றாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளின் ஆதார் விவரங்களுக்குத் தங்கள் தகவல்களைப் புதுப்பிப்பதற்கு அரசாங்கம் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை.
குழந்தைகளுக்கான இந்த ஆதார் அட்டைகள் நீல நிறத்தில் உள்ளன. மேலும் அவை பால்யஆதார் அட்டைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. குழந்தையின் ஆதாருக்கு பயோமெட்ரிக் தகவல்கள் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆதாருக்காக குழந்தையின் புகைப்படம் மட்டுமே எடுக்கப்படுகிறது. அதே நேரத்தில், குழந்தைகளுக்கான ஆதார் அட்டையை பெற பெற்றோரில் ஒருவரின் ஆதாரை வழங்குவது கட்டாயமாகும். பெற்றோர் இருவருக்கும் ஆதார் இல்லை என்றால், அவர்கள் முதலில் ஆதார் அட்டை பெற பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி..? பயனர்கள் நீல ஆதார் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. இருப்பினும், UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அருகிலுள்ள ஆதார் மையத்தை அவர்கள் சரிபார்க்கலாம். இதற்கு தேவையான ஆவணங்களின் பட்டியலையும் அவர்கள் சரிபார்க்கலாம். ஆதார் அட்டைப் பதிவுச் செயல்முறையைத் தொடர்வதற்கு முன், தேவையான ஆவணங்களைத் தயாராக வைத்திருப்பது நல்லது.
விண்ணப்பிக்கு முறை :
* அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.
* ஆதார் பதிவு படிவத்தில் உங்கள் ஆதார் எண்ணை எழுதி நிரப்பவும்.
* 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைச் சேர்க்க, பெற்றோரில் ஒருவர் ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும்.
* முகவரி மற்றும் பிற விவரங்கள் பெற்றோரின் ஆதாரில் இருந்து நிரப்பப்படும்.
* குழந்தையின் மருத்துவமனையிலிருந்து பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகலைச் சமர்ப்பிக்கவும்.
* ஆதார் நிர்வாகி பதிவு எண் அடங்கிய ஒப்புகை சீட்டை ஒப்படைப்பார்.
* பதிவு எண்ணைப் பயன்படுத்தி ஆதார் நிலையைச் சரிபார்க்கலாம்.