”காலண்டரில் இதை நோட் பண்ணிருக்கீங்களா”..? அது என்ன மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்..? இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா..?
நீங்கள் தினமும் கலெண்டர் பார்க்கும் பழக்கம் உடையவராக இருந்தால், அதில் சிறிய அம்புகுறியுடன் மேல்நோக்கு நாள், கீழ்நோக்குநாள், சமநோக்குநாள் என குறிப்பிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அவ்வாறு ஏன் குறிப்பிடப்படுகிறது..? அதற்கு அர்த்தம் என்ன..? என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. தற்போது, அதற்கான காரணத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.
மேல் நோக்கு நாள்
ரோகிணி, திருவாதிரை, பூசம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்களை 'ஊர்த்துவமுக நட்சத்திரங்கள்' என்று கூறுவார்கள். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேல் நோக்கி செய்யும் வேலைகளான கட்டிடம் கட்டுவது, கொடிமரம், மதில், பந்தல் ஆகிய வேலைகளை செய்யலாம். அதேபோல நெல், ராகி, வாழை, கரும்பு பயிர்கள், தேக்கு, மா, பலா ஆகிய மரங்களை மேல் நோக்கி நாளில் வைத்தால், நல்ல பலன்களை கொடுக்கும்.
கீழ்நோக்கு நாள்
பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில் கீழ்நோக்கி செய்யும் வேலைகளை குறிப்பிடுகிறது. அதாவது, குளம், கிணறு, வேலி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும், விவசாயிகள் மஞ்சள், மணிலா கிழங்கு வகைகள் ஆகிய மண்ணிற்கு கீழ் வளரக்கூடிய பயிர்களை பயிரிடலாம். அதனால் தான், இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை 'கீழ் நோக்கு நாள்' என்கிறார்கள்.
சம நோக்கு நாள்
அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய இந்த நட்சத்திரங்களை 'திரியக்முக நட்சத்திரங்கள்' என்பர். இந்த நட்சத்திர நாளில் யானை, குதிரை, ஒட்டகம், எருமை, கழுதை போன்ற 4 கால் பிராணிகள், கிரயம் வாங்குதல், மேய்த்தல், ஏற்றம், உழவு, வாசக்கால் வைப்பது, தூண் எழுப்புவது முதலியன காரியங்களை செய்வதற்கு ஏற்ற நாட்களாகும். இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை 'சமநோக்கு நாள்' என்கிறார்கள்.