மிக்ஜாம் புயலால் சான்றிதழ்களை இழந்துவிட்டீர்களா..? வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது எப்படி..?
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்பினால் கல்லூரி சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு கட்டணமின்றி நகல்களைப் பெற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில், மழை, வெள்ள பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை இழந்த மாணவ-மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை பெறுவதற்கு உயர்கல்வி துறையால் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவ-மாணவிகள் தாங்கள் இழந்த சான்றிதழ் பற்றிய விவரங்களை https://www.mycertificates.in/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களை பதிவு செய்த பிறகு, அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்து சந்தேகங்கள் ஏற்பட்டால், தெளிவு பெறுவதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.