புதிய ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ணிருக்கீங்களா..? எப்போது உங்களுக்கு கிடைக்கும்..? வெளியான முக்கிய தகவல்..!!
ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் குறைந்த விலையில் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், ரேஷன் கார்டு அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முக்கிய தேவையாக உள்ளது. ஆனால், கடந்த ஓராண்டுக்கு மேல் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதனால் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களில் பயன் பெற முடியாமல் உள்ளனர். இதனை கருதி புதிய ரேஷன் கார்டு வழங்குமாறு, தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
புதிய ரேஷன் கார்டு நிலை அறிய தினந்தோறும் உணவு பொருள் வழங்கும் அலுவலகத்திற்கு பொதுமக்கள் அழைந்து வருகின்றனர். இந்நிலையில், புதிய ரேஷன் கார்டு வழங்குவது தொடர்பாக ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், தற்போது தமிழ்நாட்டில் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளன. முழு நேர நியாய விலை கடைகள் 26 ஆயிரத்து 502 உள்ளது.
பகுதிநேர கடைகள் 10,452 என மொத்த கடைகளின் எண்ணிக்கை 36,954ஆக உள்ளது. இதற்கிடையே, புதிய ரேஷன் கார்டு கோரி 2 லட்சம் 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களின் மீது தொடர்ந்து பரிசீலனை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதிய அட்டைகள் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) மீண்டும் புதிய அட்டை வழங்கும் பணி தொடங்கவுள்ளது.
மே 2021 முதல் இதுவரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், குடும்ப அட்டை மாற்றம், புதிய அட்டைக்காக பொதுமக்கள் அலைய வேண்டியதை குறைக்கும் வகையில் www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், சோப்பு, முகத்துக்கு போடும் கிரிம் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியால் பருப்பு மற்றும் பாமாயில் விலையை ரேஷன் கடைகளில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Read More : வரும் 25ஆம் தேதி சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து..!! என்ன காரணம் தெரியுமா..?