புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? மக்களவை தேர்தலால் வந்த புதிய சிக்கல்..!! அப்படினா அந்த ரூ.1,000..?
புதிய ரேஷன் கார்டுகளுக்கு, விண்ணப்பித்துவிட்டு நீண்ட காலமாகவே காத்திருக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் காரணமாக, புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளானார்கள். புது கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி கிடந்தன. ரேஷன்தாரர்களால், பொருட்களையும் வாங்க முடியவில்லை. இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளையுமே மேற்கொள்ள முடியவில்லை.
எனினும் 10 நாட்களுக்கு முன்பு, 45,509 புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆன்லைனில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடைய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவதாகவும், அவர்கள் அனைவரின் மொபைல் போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டிருப்பதாகவும், ரேஷன் விரல் ரேகை சரிபார்ப்புக்கு பிறகு கடையில் ரேஷன் பொருட்களை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
அதற்கேற்றவாறு, சேலம் மாவட்டத்தில் 2023 மார்ச் முதல் ஜூலை வரை விண்ணப்பித்தவர்களில் 3,460 தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், தேர்வானவர்களுக்கான கார்டுகள், 14 தாலுகா அலுவலகத்துக்கு தனித்தனியே பிரித்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் 2 நாட்களுக்கு முன்புகூட தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் கிடையாது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கார்டுதாரர்களுக்கு, மானிய விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், புது கார்டு வழங்கும் பணியையும், உணவு வழங்கல் துறை மேற்கொள்கிறது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து, நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. இந்த நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், புதிய ரேஷன் கார்டு வினியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியிருக்கிறார். அதில், "லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளவரை புதிய ரேஷன் கார்டுகள் மட்டும் கார்டுதாரர்களுக்கு வினியோகம் மேற்கொள்ள இயலாது" என்று தெரிவித்துள்ளார்.