"பேய்கள் குடியிருக்கும் பங்கர் கோட்டை" இரவு நேரங்களில் நடக்கும் அமானுஷ்யங்களின் திகில் பின்னணி...!
ராஜஸ்தாஸ்தான் மாநிலம் ஆள்வர் மாவட்டத்தில் உள்ள ஆரவல்லி மலை தொடர் பகுதியில் உள்ள சரிஸ்கா என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் தான் இந்த பங்கர் என்ற கோட்டை உள்ளது. இந்த கோட்டை தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கேட்டையை பதினெட்டாம் நூற்றாண்டில் மன்னர் மாதோசிங் என்பவர் கட்டியுள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் யாருக்கும் இந்த கோட்டையில் மாலை ஆறு மணிக்கு மேல் இருக்க அனுமதி கிடையாது. அதேப் போல காலை சூரிய உதயத்திற்கு முன்பும் இந்த கோட்டைக்கு யாரும் வருவதற்கும் அனுமதி இல்லை. சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையில் பங்கருக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் மிகவும் பேய் பிடித்த கோட்டையாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கோட்டையில் அமானுஷ்யமான பல சத்தங்கள் வருவதாகவும் இந்த கோட்டையில் இரவில் பேய்கள் உலா வருவதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் நம்பி வருகின்றனர். இரவு நேரங்களில் அந்த கோட்டையில் பேய்களின் சத்தம், ஒருபெண் அழும் சத்தம், வளையல் சத்தம், பேயின் நிழல்கள், பயமுறுத்தும் விதமான ஒளிகள், திடீர் பாட்டு மற்றும் நடனமாடும் சத்தம் எல்லாம் கேட்பதாகப் பலர் தெரிவித்துள்ளனர்.
இந்த கோட்டையில் வாழ்ந்த இளவரசி ரத்னாவதி என்பவர் பேரழகியாக இருந்தாராம். அவரை திருமணம் செய்யப் பல ஆண்கள் ஏங்கினார்களாம். அவளுடைய அழகு மற்றும் மகிழ்ச்சியான குணம் பற்றிய கதைகள் வெகு தூரம் பரவியது. அவளுக்கு பல திருமண வரன்கள் வந்தன. அந்த சமயம் சூனியம் செய்வதை நன்கு அறிந்த ஒரு தந்திரி பூசாரி அவளை காதலித்தார். ஆனால் அழகான இளவரசிக்கு தன் மேல் விருப்பம் இல்லை என்பதை அறிந்த அவர், இளவரசி மீது மந்திரம் போட முயன்றார்.
கிராமத்தில் இளவரசியின் பணிப்பெண்கள் இளவரசிக்கு வாசனை திரவியம் வாங்குவதைப் பார்த்து, ரத்னாவதி தன்னைக் காதலிக்க வேண்டும் என்று மந்திரம் போட்டான். இதையறிந்த ரத்னாவதி பாட்டிலை வீசினார். அது பாறாங்கல்லாக மாறி தாந்திரீகரை தாக்கியது. அவர் அதன் எடையால் நசுக்கப்பட்டார். ஆனால் அவர் இறப்பதற்கு முன், இளவரசி, அவரது குடும்பம் மற்றும் முழு கிராமத்தையும் சபித்தார்.
அடுத்த ஆண்டு, பங்கர் மற்றும் அஜப்கர் படைகளுக்கு இடையே ஒரு போர் நடந்தது, இது இளவரசி ரத்னாவதி மற்றும் பெரும்பாலான இராணுவத்தின் மரணத்திற்கு வழிவகுத்தது. இந்த சாபத்தால் தான் கிராமத்தில் இந்த கோட்டை ஒரு மர்ம கோட்டையாக மாறியதாக சொல்லப்படுகிறது.
ஒரு நீண்ட சாலையில் இருபுறமும் வரிசையாக இடிபாடுகள் காணப்படுகின்றன. இவை ஜவ்ரி பஜார், நடனம் ஆடும் பெண்களின் வீடுகள்(நச்னி கி ஹவேலி) என்று அழைக்கப்படுகிறது. அழகிய நுணுக்கமான வேலைப்பாடுகள் அமைந்த மரக் கதவைத் தாண்டி உள்ளே சென்றால் ஒரு மூன்று மாடி கொண்ட பெரிய கோட்டை சிதிலமடைந்திருந்தாலும், எழிலாக உள்ளது. பக்கத்தில் இருந்த சோமேஸ்வரர் கோயில், அழகிய படிக்கட்டுக் கிணற்றுடன், அமைதியாக இருக்கிறது. கோட்டையின் உச்சியில் உடைந்த நெடுவரிசைகள், படிக்கட்டுகள், கற்கள், தூண்கள், ரத்னாவதியின் குளியலறை ஆகியவை உள்ளன.
சிங்கியாவின் ஆன்மா மற்றும் அவனால் சாபமிடப்பட்டவர்களின் ஆன்மா இன்றும் கோட்டையில் அலைவதாக நம்பப்படுகிறது. அதனால்தான் சூரிய உதயத்திற்கு முன்னரும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்னரும் யாரும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. கால்நடைகளை கூட சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாரும் இங்கு அனுமதிப்பதில்லை. இது இந்திய அரசாங்கத்தாலேயே பேய் இருக்கும் இடமாக அறிவிக்கப்பட்ட இடமாகும்.
Read more ; “அகழியுடன் கூடிய அழகிய கோட்டை!” பிரம்மிக்க வைக்கும் அந்த இடம் எங்க இருக்கு தெரியுமா?