ஆடிப்போன ஹாட்ரிக் சாம்பியன் ஆஸ்திரேலியா..!! தரமான சம்பவம் செய்த தென்னாப்ரிக்கா..!!
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை, தென்னாப்பிரிக்க மகளிர் அணி வீழ்த்தி கிரிக்கெட் உலகை மிரள வைத்தது. கடைசி 3 முறையும் ஆஸ்திரேலியா மகளிர் அணி தான் மகளிர் டி20 உலக கோப்பையை வென்றிருந்தது. ஹாட்ரிக் வெற்றி பெற்ற சாம்பியன் அணியை அரையிறுதியில் வீழ்த்தியுள்ளது தென்னாப்பிரிக்கா. மேலும், ஆஸ்திரேலிய மகளிர் அணி கடந்த 2009 டி20 உலகக் கோப்பை முதல் ஒவ்வொரு டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறது. அதில் 2009ஆம் ஆண்டு மட்டுமே ஆஸ்திரேலியா தோல்வி அடைந்திருந்தது.
பின்னர் 2010, 2012, 2014, 2016, 2018 மற்றும் 2022 என மொத்தம் ஆறு டி20 உலகக் கோப்பை அரையிறுதிகளில் ஆஸ்திரேலிய மகளிர் அணி தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது. மேலும், கடைசியாக தான் ஆடிய 15 டி20 உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அசாதாரணமான ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. தொடர்ந்து 15 உலகக் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற அணியை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா வீழ்த்தியது.
இதன் மூலம், "உலகக் கோப்பையை உங்கள் பெயருக்கே எழுதி வைக்கவில்லை" என ஆணித்தரமாக ஆஸ்திரேலியாவுக்கு கூறியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. இந்த முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அடுத்து தென்னாப்பிரிக்கா அணி சேசிங் செய்தது. அந்த அணி 135 ரன்கள் என்ற இலக்கை எட்டுவது சிரமம் என்று பலரும் எண்ணினர். ஆனால், துவக்க வீராங்கனை லாரா உல்வார்ட் நிலையாக நின்று ஆடினார்.
தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஹாட்ரிக் சாம்பியன் ஆஸ்திரேலியா அரை இறுதியுடன் தொடரில் இருந்து வெளியேறியது. மற்றொரு அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத இருக்கின்றன. அந்தப் போட்டி இன்று (அக்டோபர் 18) இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.