நீதிபதி தேர்வில் வினாத்தாள் கசிவு.. சிக்கிய பெரிய தலை..!! 5 ஆண்டு சிறை தண்டனை..!!
ஆகஸ்ட் 2017-ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில், சுமன் என்பவர் ஜூலை 16-ம் தேதி நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததாகவும், ரூ.10 லட்சத்துக்கு வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், தேர்வை ரத்து செய்யக் கோரியும், மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பாக விசாரணையில் உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மா வசமிருந்து தேர்வின் வினாத்தாள்கள் கசிந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, செப். 2017இல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மா, அவரது நெருங்கிய உறவினரான வழக்கறிஞர் சுனிதாவுக்கு தேர்வு வினாத்தாள்களை வழங்கியது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதும், இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்ததும் ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டது. மேலும் சிலருக்கும் தேர்வுத்தாள் ரூ. 10 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.
விசாரணையின் முடிவில், உயர் நீதிமன்றம், சிவில் நீதிபதி தேர்வை ரத்து செய்து, விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தது. இந்த வழக்கின் விசாரணையை, டெல்லிக்கு 2021இல் உச்ச நீதிமன்றம் மாற்றியது. இவ்வழக்கில், பல்விந்தர் குமார் சர்மா மீது முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். சுமார் 27 ஆண்டுகள் நீதித்துறை அதிகாரியாக இருந்த 56 வயதான உயர் நீதிமன்ற பதிவாளரான பல்விந்தர் குமார் சர்மா, விசாரணை காலத்தில் 9 மாதங்கள் மற்றும் 15 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யூ நீதிமன்றம், முன்னாள் உயர் நீதிமன்ற பதிவாளர் பல்விந்தர் குமார் சர்மா மற்றும் ரத்து செய்யப்பட்ட தேர்வில் முதலிடம் பெற்ற சுனிதா, சுசிலா ஆகியோர் ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பல்வேறு குற்றங்களின் கீழ் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். இதையடுத்து, இவ்வழக்கில் பல்விந்தர் குமார் சர்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1.50 லட்சம் அபராதமும், சுனிதாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 60 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
சுசிலாவுக்கு அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவர் ஏற்கெனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 6 பேர் மீதான குற்றத்தை, அரசு தரப்பு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்காததால், அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், நீதிபதி தனது தீர்ப்பில், இத்தகைய குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என தெரிவித்திருந்தார்.
Read more ; நவீன சலவையகம் அமைக்க ரூ.3 லட்சம் மானியம் தரும் அரசு..!! – சேலம் ஆட்சியர் அழைப்பு