மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படையுங்கள்!… பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை!
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட குற்றவாளியும், ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹபீஸ் சயீத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா, பாகிஸ்தானுக்கு வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவின் மிகவும் பிஸியான நகரமான மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் (26/11) உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைகளில் துப்பாக்கிகளையும், வெடிகுண்டுகளையும் ஏந்தி வந்த பயங்கரவாதிகள் கண்ணில் படுபவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டு தள்ளினார். இதில் சுமார் 164 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்தான் ஹபீஸ் சயீத்.
இவரை பிடிக்க இந்தியா நீண்ட காலமாக போராடி வருகிறது. அமெரிக்கா இவரது தலைக்கு ரூ.83 கோடியை நிர்ணயித்துள்ளது. ஆனால் ஹபீஸ் சையது தற்போது வரை பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார். 26/11 தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் அரசு இவரை, பயங்கரவாத திட்டங்களுக்கு நிதி திட்டியதாக கூறி கைது செய்தது. இப்படி இவர் அடிக்கடி கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றுதான்.
இந்தநிலையில், சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் இந்தியா பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொட்பானர் மும்தாஜ் ஜஹ்ரா பலோச் கூறுகையில் "இந்திய அதிகாரிகளிடம் இருந்து வேண்டுகோள் வந்துள்ளது. அதை பாகிஸ்தான் பெற்றுள்ளது. பண மோசடி வழக்கில் ஹபீஷ் சயீத்தை நாடு கடத்த வேண்டும் (இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்) என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான்- இந்தியா இடையே ஒப்படைப்பு தொடர்பான இருநாட்டு ஒப்பந்தம் இல்லை" என்றார்.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வழக்கை எதிர்கொண்டு வரும் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள என இந்திய வெளியுறவுத்தறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லஷ்கர்-இ-தொய்பா (Let) பயங்கரவாத குழுவின் நிறுவனரான ஹபீஸ் சயீத்தை ஐ.நா., தடைசெய்யப்பட்ட பயங்கரவாதி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.