சினிமாவில் விஜய் வாங்கும் சம்பளத்தில் பாதி கருப்பு பணம் தான்..!! அதிகாரத்தில் இருந்தவர்களிடம் மண்டியிட்டது ஏன்..?
தவெக தலைவர் விஜய், திமுகவை நேரடியாக எதிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி சூர்யாவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. "புதிதாக கட்சி ஆரம்பிக்கும்போது கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் ஆளுங்கட்சியை விமர்சிக்க வேண்டும். அதற்காகவே திமுகவை விஜய் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மக்களைச் சுரண்டி ஊழல் செய்து வருகிறது. அதேசமயம், அதிமுகவில் முதலமைச்சராக இருந்தவரே ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர்.
விஜய் தெளிவற்ற நிலையில் இருப்பதாக எச்.ராஜா சொல்கிறார். அதுதான் உண்மையும் கூட. பெரியார் சிலைக்கு கீழேயே மாநாட்டின்போது மழை வந்துவிடக்கூடாது என வேண்டி விளக்கேற்றி வைக்கிறார்கள். இது மூடநம்பிக்கை இல்லையா? அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் என தலைவர்களை முன்வைப்பதற்கு பின்னணியிலும் சாதி அரசியல் உள்ளது. மாநாட்டிற்கு கூடிய கும்பலை வைத்து பார்த்தால் மாநாடு சக்சஸ் தான். ஆனால், அவர் பேச்சு, சித்தாந்தம், வந்த தொண்டர்களை எப்படி பார்த்துக்கொண்டார் என பார்த்தால் '0' தான்.
எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனப் பேசும் விஜய், மாநாட்டுக்கு வந்த தொண்டர்களுக்கு குடிநீரை ஒழுங்காக கொடுத்தாரா? கழிப்பறைக்கு பயன்படுத்தும் நீரை பயன்படுத்தியுள்ளனர். மேடைப் பேச்சுக்கு எதையாவது சும்மா பேசலாமா? விஜய், சினிமாவில் வாங்கும் சம்பளத்தில் பாதி கருப்பு பணம் தான். ஊழலைப் பற்றி பேச தார்மீக உரிமை இருக்கிறதா? ஆட்சி அமைத்து முதல்வர் ஆனால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என அரசியலுக்கு வந்துள்ளார் விஜய்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைவா படத்துக்கு 'Time to Lead' என கேப்ஷன் போட்டதால் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கப்பட்டது. விஜய்யும், எஸ்.ஏ சந்திரசேகரும் ஜெயலலிதா முன்பாக பவ்யமாக நின்றார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கொரோனா காலகட்டத்தில் 50% சீட் என்ற நிலை இருந்ததால் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
அதிகாரத்தில் இருந்தவர்களிடம் தனது தேவைக்காக போய் மண்டியிட்டார். பிறகு, உதயநிதி ஸ்டாலினிடம் போய் நின்றார். 5 மாவட்டங்களில் தனது படத்திற்கு ஸ்கிரீன் கிடைக்கவில்லை என உதயநிதியிடம் போய் நின்றார். தனது படம் ஓடவேண்டும், வேலை நடக்க வேண்டும் என்பதற்காகவே போய் அதிகாரத்திடம் பணிந்து நின்றார். இப்போது உதயநிதியையே விமர்சிக்கிறார். விஜய் இத்தனை கோடி சம்பளம் வாங்கி வருகிறார். தனது பணத்தில் மக்களுக்கு உதவி செய்திருக்கிறாரா?
அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் வந்தபிறகு தான் நலத்திட்ட உதவி செய்கிறார், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறார்? அதற்கு முன்பு அவரிடம் பணம் இல்லையா? எந்த பொது பிரச்சனைக்காவது வெளியில் வந்துள்ளாரா? மக்களுக்கு உதவி செய்யவே முதல்வராக வருவாராம். அவருக்கு பதவி ஆசை. மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் அரசியலுக்கு வந்துதான் ஆக வேண்டுமா? எவ்வளவோ பேர் அரசியலில் இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்கிறார்கள். ஆனால், இவர் உதவி செய்ய வேண்டுமென்றால், முதலமைச்சராக வந்துதான் செய்வேன் என்கிறார்” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.