H1N1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு... 4 வயது சிறுவன் உயிரிழப்பு...! இது தான் முக்கிய அறிகுறிகள்...!
எச்1என்1 காய்ச்சல் பாதிப்பு காரணமாக கேரளாவில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தில் எச்1என்1 காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களை சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு 11 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் மற்றும் 134 சந்தேகத்திற்கிடமான வழக்குகள் பதிவாகியுள்ளன என்று மாவட்ட மருத்துவ அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நோயால் மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று எர்ணாகுளத்தில் 4 வயது சிறுவன் எச்1என்1 நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
எச்1என்1 காய்ச்சல், சில நேரங்களில் பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு வகை இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸால் ஏற்படுகிறது. பருவமழை காரணமாக காற்றில் பரவும் நோய் தொற்று எளிதில் பரவுகிறது. எச்1என்1 காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளில் காய்ச்சல், தொண்டை வலி மற்றும் தலைவலி ஆகியவை அடங்கும். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டாலோ, காய்ச்சல் அதிகமாகினாலோ, நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்பட்டாலோ அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.