H.Raja | ”அவர்கள் மதம் மாற்றவே இந்தியாவுக்கு வந்தார்கள்”..!! ஆளுநருக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஹெச்.ராஜா..!!
கால்டுவெல் - ஜியு போப் போன்றவர்கள் மக்களை மதமாற்றம் செய்யவே இந்தியா வந்ததாக ஆளுநர் ரவி பேசிய நிலையில், ஆளுநரின் பேச்சு உண்மைக்கு வலு சேர்ப்பதாக ஹெச். ராஜா கூறியுள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192-வது அவதார தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் ரவி பேசினார். அய்யா வைகுண்டர் தோன்றிய காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலம், சனாதன தர்மத்தை காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார் என பேசியிருந்தார் ஆளுநர்.
அதர்மத்தை அகற்றுவதற்காக கடவுள் நாராயணன் மனித அவதாரம் எடுத்துள்ளார். அந்த வரிசையில்தான் 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டசாமியாக நாராயணன் அவதாரம் எடுத்து வந்தார். அப்போது இருந்த சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தை கொண்டுவர முயற்சித்தார். சனாதன தர்மத்தை கற்றுக்கொடுத்தார். ஐரோப்பாவை கிறிஸ்தவம் அடையும் முன்பே இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் ஆட்சியை ஏற்படுத்தியதுபோல இந்தியாவில் ஆட்சியமைக்க முடியாது என்பதை அறிந்தனர்.
ஜியு போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜியு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர். கால்டுவெல், ஜி.யூ.போப் ஆகியோர் மெட்ராஸ் மாகாணத்திற்கு அனுப்பப்பட்டு, மிக வலிமையாக , மதமாற்றத்தையும் செய்ய தொடங்கினர். இயேசுவையும் பைபிளையும் எனக்கு பிடிக்கும். சனாதன தர்மத்தின் கோட்பாட்டை கிழக்கிந்திய கம்பெனியினர் அழித்தனர். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்" என்று பேசினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆளுநரின் கருத்தை வரவேற்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில், ”மக்களை மதமாற்றம் செய்யவே ஜியுபோப், கால்டுவெல் போன்றவர்கள் இந்தியா வந்தனர் என்று ஆளுநர் கூறியிருக்கிறார். இதுகுறித்து நான் பல ஆண்டுகளாக பேசி வருகிறேன். மேதகு ஆளுநர் அவர்களின் உரை உண்மைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது" என்று பதிட்டுள்ளார். இதற்கிடையே, ஆளுநரின் பேச்சுக்கு அய்யா வழி தலைமை பதி நிர்வாகி பால பிரஜாபதி கண்டனம் தெரிவித்திருக்கிறார். மனுதர்மத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர் அய்யா வைகுண்டர். வரலாறு தெரியாமல் வாய் திறக்க கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
Read More : Sathyaraj | ”வடமாநிலத்தில் தான் மதப்புயல், தமிழ்நாட்டில் அது மடப்புயல்”..!! நடிகர் சத்யராஜ் கடும் தாக்கு..!!