For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஞானவாபி மசூதி வழக்கு: 'ஏஎஸ்ஐ அறிக்கை உறுதியானதாக இல்லை,' அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மறுப்பு.!

12:18 PM Jan 28, 2024 IST | 1newsnationuser7
ஞானவாபி மசூதி வழக்கு   ஏஎஸ்ஐ அறிக்கை உறுதியானதாக இல்லை   அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மறுப்பு
Advertisement

உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஞானவாபி மசூதி தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது . இந்து கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் இந்திய தொல்லியல் துறை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிக்கும் படி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது . இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 834 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

Advertisement

தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில் இந்து தெய்வங்களின் சிலைகள் மற்றும் சிவலிங்கத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இந்து கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை மறுத்துள்ளது. இந்த சர்ச்சைக்குரிய வழக்கு தொடர்பாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாக குழு உறுப்பினர் காசிம் ரசூல் இலியாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் " ஞானவாபி மசூதி தொடர்பான இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்திய தொல்லியல் துறையின் அறிக்கையை ஊடகங்களில் வெளியிட்டதன் மூலம் நீதித்துறையை அவமதிப்பதோடு சமூகத்தில் பாதுகாப்பின்மை மற்றும் அராஜகப் போக்கை ஏற்படுத்த எதிர் தரப்பு முனைவதாக" குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர் " ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இந்து மதவாத அமைப்புகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்களை தவறாக வழிநடத்தி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் நீதிமன்றம் இந்த அறிக்கையை வாதி மற்றும் பிரதிவாதிக்கு மட்டுமே வழங்கி இருந்த நிலையில் இந்து அமைப்புகள் இதனை ஊடகங்களில் வெளியிட்டு மக்களிடம் பகைமையை ஏற்படுத்த முயற்சி செய்வதாகவும்" தெரிவித்துள்ளார்.

மேலும் " இந்திய தொல்லியல் துறை மசூதியில் அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்றை சிவலிங்கம் என்று கூறிய போது அதனை வைத்து சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த எதிர்தரப்பு தீவிரமாக முயற்சி செய்ததாகவும்" குற்றம் சாட்டினார். "இந்த வழக்கில் எதிர்தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தொல்லியல் துறையின் அறிக்கையை மேற்கோள்காட்டி 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து இஸ்லாமிய தரப்பு தங்களது நியாயத்தின் பக்கம் பதில் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டதாகவும்" தெரிவித்தார்.

இதற்கிடையில், ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மஸ்ஜித் கமிட்டியின் (AIMC) நிர்வாகி ஒருவர், இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையை தானும் தனது சட்டக் குழுவும் சரியாகப் படிக்கும் வரை அதைப் பற்றி பேசமாட்டேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தொல்லியல் துறையின் ஆய்வு திருப்திகரமாக இல்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை தொடர்பாக தனது கருத்தை பகிர்ந்திருக்கும் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயலாளர் யாசின் " நானும் எனது வழக்கறிஞர்கள் அணியும் இந்திய தொல்லியல் துறையின் ஆய்வை முழுவதுமாக படித்து முடிக்கும் வரை இது தொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்கப் போவதில்லை" என கூறியிருக்கிறார். மேலும் ஆய்வறிக்கையை முழுவதுமாக படித்து முடித்த பின் இது தொடர்பாக பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க இந்துவாதிகளின் வழக்கறிஞர்களில் ஒருவரான சுபாஸ் நந்தன் சதுர்வேதி " இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மற்றும் உண்மையின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கை உண்மையான ஆவணம். இது அனைத்தையும் தெளிவாக்கி இருக்கிறது" என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இந்திய தொல்லியல் துறையின் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர் அமித் குமார் ஸ்ரீவஸ்தவா " இந்திய தொல்லியல் துறை என்பது இந்தியாவின் முதன்மையான அமைப்புகளில் ஒன்று. மசூதி ஆய்வின் போது வெளிவந்த உண்மைகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை இந்திய தொல்லியல் துறை சமர்ப்பித்து இருக்கிறது. ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் இந்திய தொல்லியல் துறை அறிவியல் ஆய்வு மற்றும் உண்மையின் அடிப்படையில் அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement