"இஸ்லாம் கோவில்களை இடிக்க அனுமதிக்காது.."! ஞானவாபி மஸ்ஜித் வழக்கு: அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 'AIMPLB' கருத்து.!
உத்திர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இது தொடர்பாக முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்த நிலையில் அலகாபாத் நீதிமன்றம் நிராகரித்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்திருக்கிறது. மேலும் ஞான வாபி மசூதி தொடர்பாக ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் நியாயம் கோரப் போவதாகவும் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்திஜாமியா மஸ்ஜித் கமிட்டி, ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பாதாள அறையில் இந்துக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கிய வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. இந்த மனுவிற்கு எந்த நியாயமும் அலகாபாத் நீதிமன்றத்திடமிருந்து கிடைக்கவில்லை.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் சபியுல்லா ரஹ்மான் "உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் விரும்பும் அனைவருக்கும் அதிர்ச்சியான ஒன்று" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் விளக்கமாக பேசிய அவர் "ஞானவாபி வழக்கு 20 கோடி முஸ்லிம்கள் மற்றும் மதச்சார்பற்ற மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இன்று, மதச்சார்பற்ற இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அனைவரும் சோகமாகவும் அதிர்ச்சியுடனும் உள்ளனர். முஸ்லீம்கள் கோவில்களை இடித்து அதன் மீது மசூதிகள் கட்டினார்கள் என்பது முற்றிலும் தவறானது. இஸ்லாம் இதை அனுமதிக்கவில்லை" என்றார்.
முஸ்லிம்கள் தங்களுடைய ஆட்சி காலத்தில் பிறருடைய நிலத்தில் கோவில்கள் கட்ட வேண்டும் என்று நினைத்திருந்தால் இத்தனை கோவில்கள் இன்று இருந்திருக்குமா.? என கேள்வி எழுப்பி உள்ளார்.உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது என்று கூறிய ரஹ்மானி, நீதிமன்றங்களில் "பெரும்பான்மைக்கு தனி சட்டம்" உள்ளது என்று குற்றம் சாட்டினார். 2019 ஆம் ஆண்டு ராமர் கோவில் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய அவர், கோவிலை இடித்து பாபர் மசூதி கட்டப்படவில்லை என்றும் கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஏமாற்றமளிக்கின்றன. ஞானவாபி வழக்கில், மற்ற தரப்பினருக்கு நீதிமன்றத்தில் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. நீதிமன்றங்களில் பெரும்பான்மையினருக்கு தனி சட்டம் உள்ளது. ராமர் கோவிலிலும் அதே முடிவு எடுக்கப்பட்டது. மசூதி கட்டுவதற்காக அங்கு கோவில் இடிக்கப்படவில்லை. மக்களின் நம்பிக்கையை உடைக்கும் பாதையை நமது நீதிமன்றங்களும் பின்பற்றுகின்றன. அனைத்து மதத்தினரும் சேர்ந்து தியாகம் செய்த போதும் அனைவரும் சமமாக பார்க்கப்படவில்லை. இது மிகவும் வருத்தமான ஒன்று என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கேட்டிருப்பதாக தெரிவித்த அவர் இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடமும் கோரிக்கை வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.