லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் குஜராத் அணி இன்று மோதல்!
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த சீசனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 20 ரன்கள் தோல்வியுடன் தொடங்கிய லக்னோ அணி அதன் பின்னர் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளை வீழ்த்தி அசத்தியது. இந்த இரு ஆட்டத்திலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தார் இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ்.
21 வயதான மயங்க் யாதவ் நடு ஓவர்களில் 150 கிலோ மீட்டருக்கு மேல் சீரான வேகத்துடன் பந்து வீசுவதுடன் துல்லியமாகவும், கட்டுக்கோப்புடன் செயல்படுவது பெரிய பலமாக உள்ளது. அவரது வேகம், குஜராத்துக்கு எதிரான போட்டியிலும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ பேட்டிங்கை பொறுத்தவரை குவன்டைன் டி காக் நல்ல பார்மில் உள்ளார். அதேபோல் மார்கஸ் ஸ்டோய்னிஸும் பங்களிப்பை அளித்து வரும் நிலையில், நிக்கோலஸ் பூரான் அதிரடி காட்டி வருகிறார். இவர்கள் மூவரை நம்பி மட்டுமே லக்னோவின் பேட்டிங் வரிசை உள்ளது. கடந்த போட்டியில் டேவிட் மில்லர்க்கு பதிலாக களமிறக்கப்பட்ட கேன் வில்லியம்சன் வழக்கமான தனது பாணி ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பான பங்களிப்பை அளித்தார்
கேப்டன் கேஎல் ராகுல், ஆவேஷ் கானுக்கு பதிலாக டிரேடிங் செய்யப்பட்ட தேவ்தத் படிக்கல் இன்னும் பெரிய இன்னிங்ஸை வெளிப்படுத்தாமல் இருக்கிறார்கள். அதேபோல் இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனியும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். எனவே இவர்கள் மூவரும் பார்முக்கு திரும்பும் பட்சத்தில் லக்னோ அணியின் பேட்டிங் வலிமை பெறும்.
2022 சீசனில் சேர்க்கப்பட்ட புதிய அணிகளாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் உள்ளது. இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட 4 போட்டிகளில், அனைத்திலும் குஜராத் வென்றுள்ளது. எனவே லக்னோ அணி, குஜராத்துக்கு எதிராக இன்று முதல் வெற்றியை பெற போராடும் என எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கிய ஆயுதமாக வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் பயன்படுத்தப்படுவார் என தெரிகிறது.