இந்தியாவில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்து வருகிறதா...?
23 டிசம்பர் 2023 தேதியிட்ட தி எகனாமிஸ்ட், இதழில், "இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ கட்டமைப்பு போதுமான பயணிகளை ஈர்க்கத் தவறிவிட்டது" என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இந்த செயதி, தவறான தகவல்களை வழங்கியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட செய்தி குறிப்பில்; நாட்டில் உள்ள மெட்ரோ அமைப்புகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஏற்கனவே ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. மேலும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஒன்றே கால் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளும் தற்போது லாபத்தை ஈட்டுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், ஒவ்வொரு பொதுப்போக்குவரத்து முறையும் முக்கியமானது. வசதியான, நம்பகமான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட போக்குவரத்து முறைகளை வழங்குவதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
பன்னோக்கு போக்குவரத்து முறைகள் வலுப்படுத்தப்படுகின்றன. பேருந்து போக்குவரத்து அமைப்புகளை மேம்படுத்துவதற்காக அரசு சமீபத்தில் பிரதமரின் இ-பஸ் சேவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதில் 5 லட்சம் முதல் 40 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 10,000 மின்சாரப் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவின் நகர்ப்புறங்களின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. சிறந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது ஏற்கெனவே தெளிவாகியுள்ளது. மெட்ரோ ரயில் அமைப்புகள் பெண்கள் மற்றும் நகர்ப்புற இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான பயண முறையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.