தமிழகமே...! இன்று 9.30 முதல் 12.30 வரை குரூப் 2 தேர்வு..!
தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது.
தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்-பதிவாளர், தலைமைச்செயலக உதவி பிரிவு அலுவலர்,ஃபாரஸ்டர் உள்ளிட்ட குரூப்-2 பதவிகளில் 507 காலியிடங்களையும், அதேபோல், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை தணிக்கை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட குரூப்-2ஏ பதவிகளில் 1,820 காலியிடங்களையும் (மொத்தம் 2,327) நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2 ஏதேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜுன் மாதம் வெளியிட்டது.
முதல்கட்ட தேர்வான முதல்நிலைத்தேர்வு இன்று நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜுன் 20-ம் தேதி தொடங்கி ஜூலை 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் முழுவதும் 2,763 தேர்வு மையங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 947 பேர் தேர்வெழுதுகின்றனர். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்பாக தேர்வுக்கூடத்துக்கு செல்லுமாறுதேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வுக்கூடத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வினை கண்காணிப்பதற்காக பறக்கும் படைகள், கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கூடங்களைக் கண்காணித்திடவும், தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்வு எழுதவரும் தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை கட்டாயம் எடுத்துவர வேண்டும். தேர்வு மையங்களுக்குத் தேர்வர்கள் செல்வதற்கு ஏதுவாக தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் நாளில் தேர்வு மையங்கள் மற்றும் மாவட்ட கருவூலங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.