பெரும் சோகம்..!! ’ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் இயக்குனர் திடீர் மரணம்..!! திரையுரலகினர் அஞ்சலி..!!
'ஒரு கிடாயின் கருணை மனு', 'சத்திய சோதனை' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா (வயது 41) காலமானார். யோகிபாபு நடிப்பில், "கெணத்த காணோம்” என்ற படத்தை இயக்கி வந்த சுரேஷ் சங்கையா, அப்படத்தின் ரிலீஸுக்கு முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தவர் சுரேஷ் சங்கையா. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் தான் சுரேஷ் சங்கையா இயக்கிய முதல் படம். புதுமண தம்பதியர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு ஒன்றை பலி கொடுக்கச் சென்றிருப்பார்கள். அப்போது ஒரு கொலை வழக்கில் அவர்கள் சிக்கிக்கொள்வது தான் கதை. விமர்சன ரீதியாக இந்தப் படம் பெரியளவில் கவனம் பெற்றது. பல விருதுகளையும் வென்றது.
அதைத்தொடர்ந்து கடந்த 2023ஆம் ஆண்டு 'சத்திய சோதனை' படத்தை இயக்கி இருந்தார் சுரேஷ் சங்கையா. ஒரு கொலையை மையமாக வைத்து பிளாக் காமெடி பாணியில் இப்படத்தை இயக்கி இருந்தார். பிரேம்ஜி நாயகனாக நடித்த இந்தப் படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது. அப்படத்தை தொடர்ந்து, நகைச்சுவை நடிகர் செந்தில் நாயகனாக நடிக்க, ஒரு படத்தை இயக்கினார் சுரேஷ் சங்கையா. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், படம் வெளியாகவில்லை.
இதையடுத்து, தனது அடுத்த படத்தை யோகிபாபுவை வைத்து இயக்கி வந்தார் சுரேஷ் சங்கையா. 'கெணத்த காணோம்' என டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபேக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்ததாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியீட்டுக்கு தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா, கல்லீரல் பாதிப்படைந்து நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். கோவில்பட்டி அருகில் உள்ள கரிசல்குளத்தை சேர்ந்தவர் சுரேஷ் சங்கையா. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அடுத்த படத்தின் ரிலீஸ் விரைவில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இயக்குநர் சுரேஷ் சங்கையா மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.