பெரும் சோகம்..!! மேற்குவங்கத்தை சூறையாடிய புயல், ஆலங்கட்டி மழை..!! 5 பேர் உயிரிழப்பு..!!
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று வீசிய புயல், மழையில் ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் புயல் காற்று மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. கடும் சூறாவளி காற்றில் ஏராளமான வீடுகள் சேதமடைந்த நிலையில், மின்கம்பங்களும் சரிந்து விழுந்தன. ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயல், மழையால் ஏற்பட்ட பேரிடரில் பெண் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, நேற்றிரவு ல்பைகுரி விரைந்தார். அங்குள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குச் சென்ற அவர், புயலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதேபோல் ஜல்பைகுரி அருகே உள்ள அலியுபூர்துவார், கூச் பெஹார் மாவட்டங்களின் சில பகுதிகளையும் புயல் தாக்கியது. பேரிடர் குறித்து அறிந்த பிரதமர் மோடி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி-மைனாகுரி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன், எனது எண்ணங்கள் இணைந்துள்ளன.
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு மேற்கு வங்க பாஜகவின் அனைத்து தொண்டர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ஜல்பைகுரியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் சி.வி.ஆனந்தபோஸ் இன்று பார்வையிட உள்ளார் என மேற்கு வங்க ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.