For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காலத்தை வென்ற பெருந்தலைவர்!. கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று!.

Great leader who conquered time! Today is Karmaveer Kamaraj's birthday!
07:28 AM Jul 15, 2024 IST | Kokila
காலத்தை வென்ற பெருந்தலைவர்   கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் இன்று
Advertisement

Karmaveer Kamaraj's birthday: கர்மவீரர், கருப்பு காந்தி, கிங் மேக்கர், கல்விக்கண் திறந்தவர், படிக்காத மேதை என, தன்னலம் கருதாத செயல்பாடுகளால் புகழப்பட்டவர் காமராஜர். ஒரு அரசியல் தலைவருக்கான ஆகச்சிறந்த உதாரணமாக எக்காலத்திலும் நினைவுகூரப்படும் காமராஜருக்கு இன்று 122-வது பிறந்தநாள். குமாரசாமி - சிவகாமி தம்பதியின் மகனாக, 1903-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி, மதுரை அருகே விருதுப்பட்டியில் பிறந்தவர் காமராஜர்.

Advertisement

6 வயதிலேயே தந்தை மறைந்துவிட, தொடங்கும் முன்பே முடிவுக்கு வந்தது காமராஜரின் பள்ளிப்படிப்பு. மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்த காமராஜருக்கு, விருதுப்பட்டியின் கடைவீதியில் அரங்கேறும் விடுதலைப் போராட்டங்கள் மாற்றத்தைக் கொடுத்தன. தனது 16 வது வயதில் இந்திய நேஷனல் காங்கிரஸ் கட்சியில் முழு நேர தொண்டராக சேர்ந்து, 1930-ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்றார் காமராஜர். தீவிர விடுதலைப் போராட்டத்தில் இறங்கிய அவர், ஒத்துழையாமை இயக்கம் முதல் அடுத்தடுத்த போராட்டங்களில் பங்கேற்று, 6 முறை சிறை சென்று, 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கியதால், மாநில அளவிலான தலைவர்கள் மட்டுமின்றி, கட்சியின் தேசியத் தலைவர்களுக்கும் பரிச்சயமானார் காமராஜர். நேர்மையும், அதன் காரணமாக வெளிப்பட்ட துணிச்சலும், காமராஜருக்கு முதல்முறையாக 1954-ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியை பரிசளித்தது‌. தனது அரசியல் குருவான சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்றபிறகே காமராஜர் தலைமைச் செயலகம் சென்றதாக தகவல்கள் உண்டு.

அரசியலில் தன்னை எதிர்த்த சி.சுப்பிரமணியம், பக்தவச்சலம் ஆகியோருடன் சேர்ந்து மொத்தம் 9 பேர் கொண்ட அமைச்சரவையுடன் தொடங்கியது காமராஜரின் ஆட்சி. ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை முடிவுக்கு கொண்டுவந்ததுதான் முதலமைச்சராக காமராஜரின் முதல் நடவடிக்கை.

1963 ஆம் ஆண்டு அக்டோபர் வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார் கர்ம வீரர். இந்த காலகட்டத்தில், ஒவ்வொரு துறையிலும் தொலைநோக்குப் பார்வையுடன், அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் காமராஜரை கர்மவீரராக்கியது. ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான பள்ளிகளைத் திறந்தது, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் போக்க சீருடைகள் அதுவும் இலவசமாக, மதிய உணவுத்திட்டம் என இளைய சமுதாயத்தை அறிவார்ந்த சமுதாயமாக வார்த்தெடுக்க, சமரசமின்றி அவர் செயல்பட்ட விதம் இன்றளவும் பேசப்படும் அம்சம்.

விவசாய முன்னேற்றத்திற்காக கீழ்பவானி, மணிமுத்தாறு, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, அமராவதி, ஆரணியாறு அணைகள், மேட்டூர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேறின. விவசாயத்தைப் போல தொழில்வளர்ச்சிக்கான அளவுகோலும் காமராஜர் ஆட்சியில் மேல்நோக்கியே சென்றது. ஐந்தாண்டுத் திட்டங்களின் பலனாக தமிழகம் முழுவதும் தொழிற்பேட்டைகள், சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, ஆவடி ராணுவ தொழிற்சாலை தொடங்கி ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

மின்சார உற்பத்தி திட்டங்களிலும் குறை வைக்கவில்லை முதலமைச்சர் காமராஜர். இதுபோன்ற வளர்ச்சித்திட்டங்கள்தான் காமராஜரின் ஆட்சிக்காலத்தை தமிழகத்தின் பொற்காலம் என்று பறைசாற்றுகின்றன. முதலமைச்சராக இருந்தபோதும், காமராஜரை மக்கள் யாரும் எப்போதும் எளிதாக அணுக முடிந்தது. குறைகளை முன்வைக்க முடிந்தது.

பல திட்டங்களுக்கு அதிகாரிகளுக்கே யோசனைகளைக் கூறும் அளவுக்கு பட்டறிவு கொண்டவராக திகழ்ந்தவர் காமராஜர். பணியைச் செய்யாத அதிகாரிகளை கண்டிக்கும் ஆளுமை, நேர்மையான அதிகாரிகளை பாராட்டும் கணிவு என அவரது வெற்றிக்கு காரணங்கள் மிகவும் எதார்த்தமானதாகவே இருந்தது. 1975 ஆம் ஆண்டு காமராஜர் மறைந்துவிட்டாலும், நேர்மையான அரசியல், நேர்த்தியான ஆட்சி என்றால், அரசியல் வட்டாரத்தில் இன்றுமே காமராஜர் ஆட்சி என்ற சொல்வழக்கே பயன்படுத்தப்படுகிறது. இதைவிட காமராஜருக்கு வேறு எது புகழ் சேர்த்துவிடப்போகிறது.

Readmore: பாதுகாப்பு படையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு!. சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்!. மணிப்பூரில் அதிர்ச்சி!

Tags :
Advertisement