கிராம நத்தம் நிலம்..!! ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற ஐகோர்ட் உத்தரவு..!!
கிராம நத்தம் நிலங்களை அனுமதியின்றி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, அவர்களை வெளியேற்றுவதுடன் புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பட்ஜெட் தாக்கலின்போது, அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணையவழி பட்டா மாறுதல் முறை கொண்டுவரப்படும் என்று அறிவித்தார். அதன்படியே, அமலுக்கும் கொண்டுவரப்பட்டது. கிராம நத்தம் பட்டாக்கள் இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத நிலைமை இருந்ததால், தற்போது, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.
ஆன்லைனிலேயே நத்தம் இணையவழி பட்டா மாறுதல் செய்ய முடியும் என்று முதல்வர் ஸ்டாலினும் அறிவித்திருக்கிறார். தற்போது, 1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள், தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. நத்தம் நிலம் தொடர்பான விவரம் ஆன்லைன் மயமாகிவிட்டதால், வழிகாட்டி மதிப்பு விரைவில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. மேலும், அரசு வழங்கிய பட்டா மற்றும் பத்திர அடிப்படையில், உரிமையாளர் முழுமையான உரிமைகளையும் இனி எளிதாக பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில், கிராம நத்தம் புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, முக்கிய உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. பெரம்பலுார் மாவட்டம் குரும்பலுார் கிராமத்தை சேர்ந்த அன்பானந்தன் என்பவர், தன்னுடைய 5 சென்ட் கிராம நத்தம் நிலத்துக்கு பட்டா கோரி, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துள்ளார். இந்த நிலம், அரசு நிலமாக வகைப்படுத்தப்பட்டு உள்ளதால், விண்ணப்பத்தை ஆட்சியர் நிராகரித்துவிட்டார்.
அதனால், அன்பானந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசு நிலமாக வகைப்படுத்தியதில் குறுக்கிடுவதற்கு, ஐகோர்ட்டும் மறுத்து விட்டது. உடனே அன்பானந்தன், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். இது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அமர்வு உத்தரவிட்டுள்ளதாவது, ”அரசின் கட்டுப்பாட்டில் கிராம நத்தம் நிலங்கள் இல்லை என்று தனிநபர்கள் அவற்றை ஏராளமாக அபகரித்துவிட்டார்கள். கிராம நத்தம் நிலம் என்ற போர்வையில், நிலங்களை அபகரிப்பதை அனுமதித்தால், பொது பயன்பாட்டுக்கு அரசுக்கு நிலம் கிடைக்காது. கிராம நத்தம் நிலங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து சட்டப்படி பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில், ஒழுங்குபடுத்த வேண்டும்.
சட்டப்படி வீட்டுமனையை சொந்தமாக வைத்திருந்து, அதற்கு நத்தம் பட்டா வழங்கியிருந்தால், அதில் குறுக்கிட அரசுக்கு உரிமையில்லை. ஆனால், நத்தம் பட்டா வழங்கப்படாத நிலங்களை, யாராவது சொந்தமாக வைத்திருந்தால், அதற்கான உரிய ஆவணங்களை சரிபார்த்து பட்டா வழங்கலாம். நிலம் சொந்தம் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், அவரை ஆக்கிரமிப்பாளராக தான் கருத வேண்டும். பண பலம், ஆள் பலம், அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே, கிராம நத்தம் நிலங்களை பெருமளவில் வைத்திருக்க முடியும். அப்படி வைத்திருப்பது, வீடு இல்லாத ஏழைகளின் உரிமையில் குறுக்கிடுவது போலாகும்.
இது சமூக நீதி கொள்கையையும் மீறுவதாகும். தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப நிலங்களை வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை. எனவே, சரியான நபர்களுக்கு, சரியான காரணங்களுக்காக, கிராம நத்தம் நிலங்களை ஒதுக்குவதை உறுதி செய்யும் வகையில், வழிமுறைகள் இருக்க வேண்டும். அரசு நிலங்கள், நத்தம் நிலங்களை, மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்க வேண்டும். கிராம நத்தம் நிலங்களை அனுமதியின்றி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருதி, அவர்களை வெளியேற்ற வேண்டும்.
கிராம நத்தம், புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தி, கிராம நத்தம் நிலங்களை பயன்படுத்த வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை குறிப்பிட்ட நிலம், ஏற்கனவே நில அளவை அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்டு விட்டதால், தன்வசம் இருந்ததற்கான ஆவணம் எதையும், மனுதாரர் தாக்கல் செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. வீடு இல்லாத ஏழை என்றால், அரசின் நல திட்டத்தின் கீழ், நிலம் ஒதுக்கும்படி, அரசிடம் மனுதாரர் விண்ணப்பிக்கலாம். அதை, விதிகளுக்கு உட்பட்டு அரசு பரிசீலிக்கலாம். இந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Read More : Watch Video | சூரிய கிரகணத்தின்போது வானத்தில் வட்டமடித்த ஏலியன்கள்..!! பொதுமக்கள் அச்சம்..!!