பள்ளியில் நடந்த கொடூரம்.! வட்டி பணம் தகராறில் அரசு பள்ளி சமையலர் கொலை.! உடன் பணியாற்றிய பெண் கைது.!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு பள்ளியில் சமையலராக பணியாற்றிய பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவருடன் பணியாற்றி வந்த மற்றொரு நபர் சரணடைந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கொலை தொடர்பாக சரணடைந்த பெண் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது .
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள புத்தர் தெருவில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காலை உணவு தயாரிக்கும் பணியில் மாதேஸ்வரி என்ற பெண் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு உதவியாக கௌரி காஞ்சனா என்ற பெண்ணும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாதேஸ்வரி மாயமானதாக அவரது மகள் காவல்துறையிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் மாதேஸ்வரி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரது உடல் பவானி காலிங்கராயன் கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
மாதேஸ்வரி மாயமான அதே நாளில் அவருடன் பணியாற்றிய கௌரி காஞ்சனா தனது குழந்தைகளுடன் மாயமானதாக அவரது தந்தை காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனால் காவல்துறையின் கவனம் கௌரி காஞ்சனா பக்கம் திரும்பியது. இந்நிலையில் மாதேஸ்வரியை கொலை செய்தது தொடர்பாக குமாரபாளையம் விஏஓ முன்னிலையில் சரணடைந்திருக்கிறார் கௌரி காஞ்சனா. மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பரபரப்பான வாக்கு மூலமும் அளித்துள்ளார் .
அதில் மாதேஸ்வரி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்திருக்கிறார் அவரிடமிருந்து கௌரி காஞ்சனாவும் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார். மேலும் தனக்கு தெரிந்தவர்களுக்கும் கடன் வாங்கி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் மாதேஸ்வரிக்கு கொடுக்க வேண்டிய வட்டித் தொகையை கௌரி காஞ்சனா எடுத்து செலவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது பணத்தை கொடுக்கும்படி மாதேஸ்வரி தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறார். இதனால் பள்ளியின் சமையல் கூடத்தில் ஆளில்லாத போது சேலையால் கழுத்தை நெறித்து மாதேஸ்வரியை கொலை செய்திருக்கிறார் கௌரி காஞ்சனா. இதனைத் தொடர்ந்து தனது மகளின் உதவியுடன் அவரது உடலை பவானி காலிங்கராயன் கால்வாயில் வீசியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கௌரி காஞ்சனாவை கைது செய்துள்ள காவல் துறையினர் அவள் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.