"அவரின் நெஞ்சில் குடிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கே அரசு வேலை.."! தவெக கட்சி புஸ்ஸி ஆனந்த் பேச்சால் பரபரப்பு.!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தளபதி விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசியல் கட்சியை தொடங்கினார். தனது அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டி அவர் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக போட்டியிடும் எனவும் தெரிவித்திருந்தார்.
தளபதி விஜய்யின் அரசியல் பயணத்தில் அவருக்கு ஆலோசகராக இருந்து வரும் புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர்களது கட்சிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கிய பின் கட்சியின் கொடி மற்றும் சின்னம் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய விஜய் கடந்த ஒரு வருடங்களாக விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி இருந்தார்.
இதன் அடிப்படையில் அரசியல் கட்சிகளைப் போன்றே மாவட்ட நிர்வாகிகள் அமைக்கப்பட்டு விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக கட்டமைக்கப்பட்டு வந்தது. மேலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தொடர்ந்து மக்கள் சேவையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு தனது அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் விஜய். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளின் கூட்டம் பனையூரில் ரகசியமாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் 2026 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என தெரிவித்தார். மேலும் கட்சியில் ஒன்றியம் மாவட்ட மற்றும் வட்ட செயலாளர் போன்ற பதவிகள் இருப்பதாகவும் தெரிவித்த அவர் தளபதியின் மனதில் இடம் பிடித்தவர்களுக்கு நமது ஆட்சியில் அரசு வேலை உறுதி என கூறினார். கட்சியில் இருப்பவர்களுக்கும் ரசிகர்களுக்கும் வேலை என்று இவர் அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.