தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் உயர்வு...? உண்மை செய்தி என்ன...
தமிழகத்தில் பேருந்து கட்டணங்களை உயர்த்தும் திட்டம் இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மூன்று கட்டங்களில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக வீடுகளுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வு என அனைத்து வழிகளிலும் ஏழை, எளிய மக்களை தமிழக அரசு வாட்டி வதைத்து வருகிறது. இப்போது கூடுதலாக பேருந்து கட்டணங்களையும் உயர்த்தும் நோக்குடன் அதற்காக தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு சிறிதும் இரக்கமே இல்லை என்பதைத் தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக போக்குவரத்துத் துறை தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து எந்த ஒரு கருத்துருவும் தமிழக அரசிடம் இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.