புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..!! மீண்டும் அமைச்சரான செந்தில் பாலாஜி, நாசருக்கு எந்த துறை?
தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், ஜாமினில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்த ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரன் அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சர்களாக செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்களை முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். அதோடு, பொன்முடி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மதிவேந்தன் ஆகிய 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (29.09.2024) மாலை 03.30 மணியளவில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்கியதும் முதல் நபராக பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செந்தில் பாலாஜி, கோவி.செழியன் மற்றும் ஆவடி நாசர் ஆகியோர் அடுத்தடுத்து அமைச்சர்களாக பதவியேற்றனர். துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் பதவியேற்க வேண்டிய தேவை எழவில்லை. இதனையடுத்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டவர்கள் ஆளுநருக்கும், முதல்வருக்கும் பூங்கொத்துகளைக் கொடுத்து வாழ்த்து பெற்றனர்.
புதிய அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படுள்ளன. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறை கோவி.செழியனுக்கும், சுற்றுலாத் துறை பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும் ஒதுக்கப்பட்டது. சிறுபான்மையினர் நலன் மற்றும் அயலக தமிழர்கள் நலத் துறை ஆவடி நாசருக்கு ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே சமயம் உதயநிதிக்கு கூடுதல் துறைகள் ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
Read more ; நடிகர் முதல் துணை முதலமைச்சர் வரை.. உதயநிதி ஸ்டாலின் கடந்து வந்த பாதை..!!