'அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கவில்லை' - ஆளுநர் மாளிகை விளக்கம்!
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்தாண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சென்னையில் பேசியபோது, முத்துராமலிங்க தேவர் மற்றும் அண்ணாக்கும் இடையே நடந்ததாக ஒரு நிகழ்வினை பகிர்ந்தார். அதாவது, முத்துராமலிங்க தேவர் அண்ணாவை பார்த்து '' கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை தப்பாக பேசினால் மீனாட்சி அம்மனுக்கு பாலுக்கு பதிலாக ரத்தத்தால் அபிஷேகம் பண்ண வேண்டியிருக்கும்'' என எச்சரித்ததாகவும் அதற்கு பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர் என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலையின் இந்த பேச்சு அதிமுகவினரிடையே கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுகவுடன் கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுகவின் மறைந்த மூத்த தலைவர் மீது போலி விமர்சனம் வைப்பதாக அண்ணாமலையை அதிமுகவினர் கடுமையாக சாடினர்.
பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர் பற்றி பொய்யான கருத்துக்களை பேசி பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக அவர் மீது சேலத்தை சேர்ந்த பியூஷ் மானுஷ் புகார் அளித்திருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் பேரில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக ஆளுநரிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் அனுமதி கோரியிருந்ததாகவும், அதன்பேரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் மாளிகை எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
அண்ணாமலைக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.