'அண்ணா குறித்த சர்ச்சை பேச்சு..' அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்!
முத்துராமலிங்கத்தேவர் மற்றும் அறிஞர் அண்ணா குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய புகாரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
மதுரையில் அண்ணாமலை பேசும்போது முத்துராமலிங்க தேவர் பேசியதாக ஒரு கருத்தை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையை விமர்சித்தார். இதைதொடர்ந்து, திமுக, அதிமுக கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். தொடர்ந்து அவரது கருத்து பொய்யானது என்றும் கூறினார். இதை அண்ணாமலை தொடர்ந்து மறுத்து வந்தார்.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ், அண்ணாமலையின் பேச்சு தொடர்பாக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அண்ணாமலை மீது இரு சமூகத்தினருக்கிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அரசின் அனுமதியை பெற வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில், பியூஸ் மனுஸ் தொடர்ந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசின் செயலாளர் நந்தகுமார் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.
ஒரு சில வழக்குகளில் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறுவதற்கு முன்னதாக அரசாணை மூலம் வெளியிட வேண்டும். அதற்கு ஆளுநரின் ஒப்புதல் பெற்று இருப்பது அவசியம் ஆகும் என்பதால், அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதால் வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்ட தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து உள்ளார். ஏற்கெனவே சேலத்தில் இரு பிரிவினரிடையே பதற்றம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, கொடூரமான திமுக அரசு கடைசி 3 ஆண்டுகளில் தன் மீதும், பாஜகவினர் மீதும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதேபோல மீண்டும் ஒரு வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் நடந்த உண்மையை சுட்டிக்காட்டியதற்காக வழக்கு தொடரப்பட்டிருக்கிறது எனக்கூறி திமுக அரசை கடுமையாக சாடினார். மேலும், திமுக அரசுக்கு மனமார்ந்த நன்றி எனக்கூறி வஞ்சப்புகழ்ச்சியில் சாடிய அவர், முத்துராமலிங்க தேவர் கூறியதை நினைவுகூற வைத்துள்ளது திமுக என்றார். அத்துடன் திமுக அரசால் தன்னை தடுக்க முடியாது என்றும் கூறினார். இதனுடன் வழக்கு விசாரணை நடத்த நந்தகுமார் அனுமதி வழங்கிய கடிதத்தின் நகலையும் பகிர்ந்துள்ளார்.