சூப்பர் திட்டம்..! பெண் குழந்தை பிறந்தால் ரூ.50,000 வழங்கும் அரசு...! இந்த ஆவணம் இருந்தால் போதும்...!
பெண் குழந்தை பிறந்தால் தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பெண் குழந்தை பிறந்தால் தமிழக அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண்குழந்தையுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 வயது புர்த்தியடையும் முன் விண்ணப்பிக்க வேண்டும். முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்து இரண்டாவது இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதியுதவி விவரம்; ஒரு பெண் குழந்தையுடன் கணவனோ அல்லது மனைவியோ நிரந்தர அறுவை சிகிச்சை செய்திருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.50,000/- க்கான டெபாசிட் பத்திரம் வழங்கப்படும். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து ஒரு குழந்தைக்கு ரூ.25,000 வீதம் 2 குழந்தைக்கு ரூ.50,000 க்கு 2 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். முதல் குழந்தை பெண் குழந்தை இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தாலும் மூன்று குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைக்கு ரூ.25,000/- வீதம் 3 குழந்தைகளுக்கும் ரூ.75,000/ க்கு 3 டெபாசிட் பத்திரங்கள் வழங்கப்படும். இதற்கான முதிர்வுத்தொகை இக்குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடையும் பொழுது பெற்றுக்கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்; (பொது பிரிவு மற்றும் சிறப்புபிரிவு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.) தாயாரின் மாற்றுச்சான்று, தந்தையின் மாற்றுச்சான்று, திருமண பத்திரிக்கை, முதல் குழந்தை பிறப்பு சான்று, 2 ஆம் குழந்தை பிறப்பு சான்று, வருமான சான்று ரூ.1,20,000 க்குள் இருக்க வேண்டும் (தாசில்தாரிடம்), இருப்பிடச்சான்று (தாசில்தாரிடம்), ஜாதிச்சான்று (தாசில்தாரிடம்) , ஆண் வாரிசு இல்லாத சான்று(தாசில்தாரிடம்), தாயார் (அ) தந்தையின் கருத்தடை செய்த சான்று (40 வயதுக்குள் இருக்க வேண்டும்) மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும். ரோட்டரி வழக்கறிஞரிடம் 2 பெண் குழந்தைக்குப்பின் ஆண்குழந்தையை தத்தெடுக்க மாட்டோம் என்று உறுதி மொழிப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும், குடும்ப புகைப்படம், குடும்ப அட்டை ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.