"இருக்கு, ஆனா இல்ல".! தலைக்கவசத்தை பொதுமக்களுக்கு கொடுத்து பிடிங்கிய சம்பவம்.! கிருஷ்ணகிரியில் பொதுமக்கள் அதிர்ச்சி.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிதல் விழிப்புணர்வு பேரணியில், மாவட்ட ஆட்சியர் சரயு, பொதுமக்களுக்கு அணிவித்த தலைக்கவசங்களை, சிறிது நேரத்தில் அரசு ஊழியர்கள் திரும்பப்பெற்றுச் சென்றனர். இந்த சம்பவம் காண்போரை முகம் சுழிக்க வைத்தது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மே மாதம் 2023இல் எடுத்த கணக்கெடுப்பின்படி, 279 சாலை விபத்துகளில், 307 பேர் இறந்துள்ளதாகவும், 757 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்கள் அதிகரித்து வந்த நிலையில், அம்மாவட்டத்தின் ஆட்சியர் கே.எம்.சரயு, இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள உத்தரவிட்டார். இதுகுறித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள குழு அமைக்கவும் உத்தரவிட்டார்.
அவர் அளித்த உத்தரவின் பேரில், சாலை விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளத் தொடங்கினர். அதன் பேரில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியவர்கள், குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், வேகமாக வாகனம் ஓட்டியவர்கள், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியவர்கள், அதிக சுமை ஏற்றிய கனரக வாகனங்கள் என்று அனைத்தின் மீதும் அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஆட்சியர் சரயு கொடியசைக்க, நேற்று கிருஷ்ணகிரியில் போக்குவரத்துத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிதல் குறித்த விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. அந்த வழியே வந்த வாகன ஓட்டிகளுக்கு ஆட்சியர் சரயு தலைக்கவசங்களை அணிவித்தார். இது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் தலைக்கவசம் அணிவித்து சென்ற சிறிது நேரத்தில், அங்கிருந்த அரசு ஊழியர்கள், அந்த தலைக்கவசத்தை திரும்ப பெற்றனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.