ஒயர் இணைப்பு இல்லாத புதிய தொழில்நுட்பத்திற்கு மாறும் அரசு கேபிள்!… களமிறங்கும் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள்!
ஒயர் இணைப்பு இல்லாத, இன்டர்நெட் வழியாக இயங்கும், 'ஐபிடிவி' தொழில்நுட்பத்தில் அரசு கேபிள் டிவி சேவை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசு கேபிள், 'டிவி நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் 36 லட்சமாக இருந்த அரசு கேபிள், 'டிவி' இணைப்பு, தற்போது, 21 லட்சமாக குறைந்து விட்டது. 'சேவை குறைபாடே இதற்கு காரணம்' என, கேபிள் ஆப்பரேட்டர்கள் புகார் தெரிவிக்கினர். அதாவது, அரசு கேபிள் வாயிலாக, 160 சேனல்கள் ஒளிபரப்பாகும் என்றாலும், பெரும்பாலான சேனல்கள் சரியாக தெரிவதில்லை, ஒளிபரப்பிலும் துல்லியமில்லை, கட்டணத்திலும் பெரிய வித்தியாசமில்லை என்பதால், தனியார் கேபிளுக்கு வாடிக்கையாளர்கள் மாறிவருகின்றனர்.
இந்நிலையில், அரசு கேபிள், 'டிவி' இணைப்பு எண்ணிக்கையை அதிகரிக்க, அதன் நிர்வாக குழு கூட்டம் சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதுபற்றி, அரசு கேபிள், 'டிவி' நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 'செட் டாப்' பாக்ஸ் பற்றாகுறையை போக்க, முதற்கட்டமாக, ஐந்து லட்சம் செட் டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்ய, நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, வாடிக்கையாளர்களை தக்க வைக்க முடியும்.
மேலும், ஒயர் இணைப்பு ஏதும் இல்லாத, இன்டர்நெட் வழியாக இயங்கும், 'ஐபிடிவி' தொழில்நுட்பத்தில் களமிறக்க, அரசு கேபிள், 'டிவி' நிர்வாகம் முடிவெடுத்து உள்ளது. இந்த தொழில் நுட்பத்தில், 'ஜியோ, ஏர்டெல்' போன்ற பெரு நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன; தற்போது அரசு கேபிள் டிவி'யும் கால்பதிக்கிறது. சென்னை உட்பட பெருநகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களிலும் இணைய செயல்பாடு உள்ளதால், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முடியும் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.