உங்ககிட்ட கூகுள் பே, போன் பே இருக்கா..? அப்படினா நீங்களும் இப்படி மாட்டிக்காதீங்க..!!
மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்தும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் புது வகையான மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இதனால் பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்குமாறும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.
கூகுள் பே மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ”உங்களுக்கு முன்பின் தெரியாத யாரோ ஒருவர் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் தெரிந்தே உங்களுக்கு பணம் அனுப்புவார்கள். உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்ததும், உங்களை தொடர்பு கொண்டு, தெரியாமல் பணம் அனுப்பிவிட்டதாகவும், வேறு ஒருவருக்கு அனுப்புவதற்கு பதில் அவசரத்தில் உங்களுக்கு அனுப்பியதாகவும் கூறுவார்கள்.
அதுமட்டுமன்றி, நான் தவறுதலாக அனுப்பிய பணத்தை இதே எண்ணிற்கு திரும்ப அனுப்புங்கள் என்றும் கேட்பார்கள். நீங்கள் அனுதாபப்பட்டு பணத்தை அனுப்பினால், உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்து விடுவார்கள். பிறகு உங்களின் வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகிவிடும். ஒருவேளை கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் யாரேனும் உங்களுக்கு தெரியாதவர்கள் பணம் அனுப்பி அதனை திரும்ப அனுப்புமாறு கேட்டால் உடனடியாக பணத்தை அனுப்ப வேண்டாம்.
பணம் அனுப்பிய அந்த நபரை தொடர்புக்கொண்டு அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக வாங்கிக் கொள்ளுமாறு கூறுங்கள்.
உங்களுக்கு யாரேனும் கூகுள் பே-வில் பண அனுப்பி, அதை திரும்ப அனுப்ப குறுஞ்செய்தியில் லிங்க் அனுப்பினால் அவரசப்பட்டு அதை கிளிக் செய்துவிட வேண்டாம். அது, உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்வதற்காக லிங்காக இருக்கலாம்” என்று எச்சரித்துள்ளனர்.
மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் மோசடிகளில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.
Read More : ஆப்பு வைக்கும் சீன பூண்டு..!! தடையை மீறி தமிழ்நாட்டில் விற்பனை ஜோர்..!! மக்களே உஷார்..!! எல்லாம் விஷமாம்..!!