குட்நியூஸ்!. இந்த வாகனங்களுக்கு சுங்க வரி இல்லை!. கட்டண விதிகளில் திருத்தம் செய்து அமைச்சகம் அதிரடி!
Toll Tax: சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் , தனியார் வாகன உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில், நாளொன்றுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் 20 கிலோமீட்டர் வரை பயணம் செய்வதற்கு கட்டணம் விதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவு சாலைகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு டோல்கேட்டில் சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. பாஸ்டேக் அடிப்படையில் இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது செயற்கைகோள் அமைப்பான ஜிஎன்எஸ்எஸ் வழியாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தனியார் வாகனங்களைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளில் தினமும் 20 கிலோமீட்டர் வரை கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்படும் வகையில் புதிய உத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த உத்தரவை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதற்காக தேசிய நெடுஞ்சாலைக் கட்டணம் (விகிதங்கள் மற்றும் வசூல் நிர்ணயம்) விதிகள், 2008ல் திருத்தம் செய்துள்ளது. அதில்,’தேசிய நெடுஞ்சாலைகள், நிரந்தர பாலம், பைபாஸ் அல்லது சுரங்கப்பாதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் தேசிய அனுமதி வாகனம் அல்லாத பிற வாகனங்களில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம் அடிப்படையிலான பயனர் கட்டண வசூல் முறையின்கீழ் ஒரு நாளில் ஒவ்வொரு திசையிலும் 20 கிலோமீட்டர் அவர்கள் சுங்கவரியின்றி பயணம் செய்யலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.