இல்லத்தரசிகளே குட்நியூஸ்!. ஒரே நாளில் தக்காளி விலை ரூ.60ஆக சரிந்தது!
Tomato: தக்காளி விலை இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.30 வரை குறைந்துள்ளதால் ரூ. 60க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து வரத்தும் குறைவாக வருகிறது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை கடந்த வாரத்தோடு பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி விலை உயர்ந்து கொண்டே வந்தது.
இருப்பினும், தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூட்டுறவு துறை மூலமகாக செயல்படும் பண்ணை பசுமைக்கடைகளில் தக்காளி கிலோ 61 ரூபாய்க்கு விற்பனை செய்யப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடாந்து மழை பெய்துவருவதன் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு காய்கறிக்கு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும் தக்காளியின் விலை 90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கொள்முதல் செய்யும் விலையிலேயே மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பண்ணை பசுமைக் கடைகளில் 61 ரூபாயிக்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் திருவல்லிகேணி, ராயப்பேட்டையில் நியாயவிலை கடைகள் மூலமாகவும் அம்மா உணவகங்களுக்கு பண்ணை பசுமை கடைகள் ஊழியர்கள் வாயிலாகவும் தக்காளி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், தக்காளி விலை இன்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.30 வரை குறைந்துள்ளது. நேற்றுவரை தக்காளி விலை ரூ.90 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திராவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.