குரூப் 4 தேர்வர்களுக்கு செம குட் நியூஸ்..!! காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிரடி உயர்வு..!!
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 15 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுதினர்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதமே வெளியாகும் என பின்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கை முதலில் 6,244 ஆக இருந்த நிலையில், 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில், குருப்-4 தேர்வு முடிவுகள் இன்று (அக்.28) பிற்பகல் வெளியிடப்பட்டன. அதோடு புதிதாக மேலும் 559 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு தற்போது காலியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது. இதனால், கட் ஆப் மதிப்பெண் மேலும் கணிசமாக குறையும். தேர்வு முடிவுகள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அ.ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்ட குருப் 4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். தபால் வழியாக எந்தத் தகவலும் அனுப்பப்படாது. எனவே, தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
குருப் 4 தேர்வு முடிந்து 92 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுற்று 92 நாட்களில் முடிவுகள் வெளியிடப்படுவது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இந்த இறைச்சியை சாப்பிடுவது ரொம்பவே டேஞ்சர்..!! அதுவும் இந்த நோய் இருப்பவர்கள் ஜாக்கிரதை..!!