திருவண்ணாமலைக்கு கூட்ட நெரிசல் இல்லாம போங்க..!! உங்களுக்காக சிறப்பு ரயில்கள் காத்திருக்கு..!! தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள கார்த்திகை தீபத் திருநாள் மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் இன்று முதல் 27ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, தாம்பரம் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கபட உள்ளது. தாம்பரத்தில் இருந்து நவம்பர் 26, 27ஆம் தேதிகளில் காலை 8.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) மதியம் 12.35 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
மறுமார்க்கமாக அதே தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 1.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06130) மாலை 5.15 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இதேபோல நவம்பர் 26, 27ஆம் தேதிகளில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06033) வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதே தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் (06034) வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக காலை 9 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.