வைகுண்ட ஏகாதசி விரத மகிமை!. எந்த நாளில் கண் விழிக்கணும்?. மோட்சத்திற்கு வழிகாட்டும் மகாவிஷ்ணு!
Vaikunda Ekadasi: இந்துக்களின் மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்றாக கருதப்படுவது ஏகாதசி விரதம். பொதுவாக மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி ‘வைகுண்ட ஏகாதசி’ என்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11 ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்களை தரும் என கூறப்படுகிறது. வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம். இப்பொழுது வைகுண்ட ஏகாதசியன்று எவ்வாறு விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அப்படி விரதம் இருப்பதினால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
வைகுண்ட ஏகாதசி நாளில் எதுவும் சாப்பிடாமல் கண் விழித்து விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சொர்க்க வாசலைத் திறந்து மோட்சத்துக்கு வழிகாட்டுகிறார் பகவான் மகாவிஷ்ணு. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். இது மகாவிஷ்ணு அறிதுயிலில் இருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி தனிச்சிறப்பு பெறுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளை (ஜனவரி 10ஆம் தேதி) நண்பகல் 12.03 மணிக்கு வருகிறது. அன்றைய தினம் திருப்பதி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் என்ற பரமபதவாசல் திறக்கப்பட உள்ளது. சூரியன் உதிக்கும் போது, என்ன தித்தி இருக்கிறதோ அதைதான் பின்பற்றுவார்கள். இதன் அடிப்படையில், நாளை இரவு கண் முழித்து நாளை மறுநாள் காலையில் சொர்க்கவாசல் பார்க்கப்படும்.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஜனவரி 09ம் தேதி அன்று பகல் பொழுதுடன் உணவு சாப்பிடுவதை நிறுத்திக் கொண்டு பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதத்தை துவங்கலாம். அப்படி விரதம் இருக்க முடியாதவர்கள் அரிசி உணவை எடுத்துக் கொள்ளாமல் எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். ஜனவரி 10ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வை கண்டு தரிசித்த பிறகு, அன்று பகல் பொழுதில் தூங்காமல், உணவு எடுத்துக் கொள்ளாமல் விரதத்தை தொடர வேண்டும். ஜனவரி 10ம் தேதியன்று இரவு கண் விழித்து, ஜனவரி 11ம் தேதி காலை பாரணை செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
ஜனவரி 11ம் தேதி காலை 08.13 மணியுடன் துவாதசி நிறைவடைந்து விடும். அதனால் அதற்கு முன்பாக அனைத்து விதமான காய்கறிகளையும் சேர்த்து சமைத்து பெருமாளுக்கு தாளிகை போட்டு, நைவேத்தியம் செய்து விட்டு, பிறகு நாமும் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம். வைகுண்ட ஏகாதசி பாரணையில் அகத்திக்கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவன கண்டிப்பாக இடம்பெற வேண்டும். காலையில் பாரணை செய்து முழு உணவாக எடுத்துக் கொள்ள பிறகு பகலில் எளிமையான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். அன்று மாலை விளக்கேற்றி பெருமாளை வழிபட்ட பிறகே விரதத்தை முழுவதுமாக நிறைவு செய்து விட்டு, நம்முடைய வழக்கமாக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.